கரோனாவில் இருந்து குழந்தைகளுக்கு பாதுகாப்பு : ஆணையத் தலைவர் வலியுறுத்தல்

கரோனாவில் இருந்து குழந்தைகளுக்கு பாதுகாப்பு :  ஆணையத் தலைவர் வலியுறுத்தல்
Updated on
1 min read

``குழந்தைகளுக்கான தடுப்பூசி அறிமுகமானால், அதனை தங்கள் குழந்தைகள் போட்டுக்கொள்ள பெற்றோர் அனுமதிக்க வேண்டும்” என, தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி வலியுறுத்தினார்.

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம், நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தலைமை வகித்தார். ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி பேசியதாவது:

குழந்தைகள் பிரச்சினைகள் மற்றும் பாலியல் தொடர்பான புகார்கள் பெறப்பட்டால் மாவட்ட குழந்தைகள் நலக்குழு மற்றும் காவல்துறையினர், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து குழந்தைகளுக்கான மறுவாழ்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். குழந்தைகள் நலன்சார்ந்த சட்டங்கள் குறித்து, துறை அலுவலர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் இல்லங்களில் உள்ள பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போட வேண்டும். கரோனா 3-வது அலை குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். குழந்தைகளுக்கு தடுப்பூசி அறிமுகமானதும், அனைத்து பெற்றோரும் தங்களது குழந்தைகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.

அரசு மற்றும் தனியார்ப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிக் குழந்தைகளுக்கு துன்புறுத்தல் ஏற்படாத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளைக் கண்டறிந்து, தேவையான உதவிகள் மேற்கொள்ள வேண்டும். குழந்தை திருமணங்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து பெற்றோர்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணன், மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ராமராஜ் மற்றும் குழந்தைகள் நல அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in