

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு மற்றும் மாநகராட்சி ஆணையர் பா. விஷ்ணு சந்திரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் நேரடியாக கலக்கும் இடங்களில் மாநகராட்சி மூலம் கழிவுநீர் சுத்திகரிக்கும் அமைப்புகளை 10 வெவ்வேறு இடங்களில் அமைக்க ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் 8 இடங்களில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
சிந்துபூந்துறை பகுதியில் உள்ள சுத்திகரிப்பு கட்டமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து ஆட்சியர் விஷ்ணு ஆய்வு செய்தார். பாதாள சாக்கடைத் திட்டம் பகுதி-2 அமைக்கும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து பாளையங்கோட்டை மண்டலம் வார்டு எண் 13-ல் திருச்செந்தூர் சாலையில் உள்ள தினசரி சந்தையில் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் ரூ.40 கோடியில் நவீன முறையில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும் ஆய்வு செய்யப்பட்டது. தற்காலிக தினசரி சந்தை செயல்படும் போலீஸ் குடியிருப்பு மைதானம் மற்றும் ஜவஹர் மைதானம் ஆகிய இடங்களையும் ஆட்சியர் பார்வையிட்டார்.
முன்னதாக மானூர் வட்டம் மானூர் பெரியகுளத்துக்கு தண்ணீர் கொண்டு வருவது குறித்தும் பெரியகுளத்தின் மேம்பாடுகள் தொடர்பாகவும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.