

சேலம், வாழப்பாடி, மேச்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நடப்பாண்டு தென்னை விவசாயிகள் உற்பத்தி செய்த கொப்பரை தேங்காயை மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட அரவை கொப்பரையின் குறைந்தபட்ச ஆதரவு விலை கிலோ ஒன்றுக்கு ரூ.103.35 என்ற விலையில் கொள்முதல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசின் நாஃபெட் நிறுவனம் மூலம் தரம் ஆய்வு செய்து கொள்முதல் செய்யப்படவுள்ளது. சேலம் மாவட்டத்தில் மொத்தம் 2,000 டன் கொப்பரை கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
சேலம், வாழப்பாடி மற்றும் மேச்சேரி ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் தேர்வு செய்யப்பட்டு வார வேலை நாட்களில் முதன்மை கொள்முதல் முகமையாக செயல்படும்.
இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கிக்கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல்களுடன் சேலம் (90803 23535), வாழப்பாடி (91593 56156) மற்றும் மேச்சேரி (95438 12911) ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை அணுகி பதிவு செய்து கொள்ள வேண்டும்.
கொப்பரை தேங்காய் கொள்முதல் பணி செப்டம்பர் வரை நடைபெறும். கொள்முதல் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.