

சேலத்தில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீஸார் 4 பேரை கைது செய்தனர்.
சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள கடை ஒன்றில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மொத்தமாக வாங்கி இருப்பு வைத்து, விற்பனை செய்யும் முயற்சி நடந்து வருவதாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு தகவல் வந்தது.
இதுதொடர்பாக கடைகளில் ஆய்வு செய்ய மாநகர காவல் ஆணையர் நஜ்மல்ஹோடா உத்தரவிட்டார். இதையடுத்து, போலீஸார் செவ்வாய்ப்பேட்டையில் மளிகைக் கடை நடத்தி வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பரத்சிங் என்பவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சேலம் மகுடஞ்சாவடி பகுதியில் உள்ள குடோனில் ஹான்ஸ் உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பது தெரிந்தது. இதனையடுத்து, போலீஸார் அந்த குடோனில் சோதனை செய்தனர்.
சோதனையில், ரூ.15 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பரத்சிங், அவரது தம்பி தீப்சிங் மற்றும் ஓம்சிங், மதன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.