

விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் ஆட்சியர் மோகனிடம் புகார்மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பது:
மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை. வியாபாரி களிடம் நெல்லை கொள்முதல் செய்வதை தடை செய்ய வேண்டும்.
இதுதொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டு நடைபெறுகிற முறைகேடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன் கூறியது:
வியாபாரிகள், விவசாயி பெயரில் உள்ள நிலங்களில் தாங்கள் குத்தகைக்கு பயிரிடு வதாக கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று பெற்றுள்ளனர்.
அதன் மூலம் வியாபாரிகள் தாங்கள் ஏற்கெனவே கொள்முதல் செய்த நெல்லை, தாங்கள் பயிர் செய்த நெல் என அதற்கான ஆவணங்களை காண்பித்து நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்கின்றனர். இதன் மூலம் வியாபாரிகள் அதிக லாபம் அடைகின்றனர் என தெரிவித்தார்.
இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்களிடம் கேட்டபோது, "வருவாய்த் துறை வழங்கிய ஆவணத்தின் அடிப்படையில் நெல் கொள்முதல் செய்கிறோம். அதனால் நெல்லை கொண்டு வருபவர் விவசாயியா, வியாபாரியா என்று எங்களுக்கு எப்படி தெரியும்" என்று தெரிவித்தனர்.