

கடலூர் ராணுவ கேண்டினில் முன்னாள் ராணுவ வீரர்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் கேண்டினுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கடலூர் புதுப்பாளையம் பகுதியில் ராணுவ கேண்டின் உள்ளது. இந்த கேண்டினில் மாதந் தோறும் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் தங்களது வீட்டுக்கு தேவை யான பொருட்கள் மற்றும் மதுபாட் டில்களை வாங்கிச் செல்வர்.
தற்போது தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் நேற்று முதல் ஓய்வுபெற்ற ராணுவத்தினருக்கு மதுபாட்டில் வழங்கப்படும் என்று கேண்டின் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று காலை முதல் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் ராணுவ கேண்டின் முன்னால் குவிந்தனர்.
கேண்டின் நிர்வாகம் குறைந்த நபர்களை அழைத்து மதுபாட்டில்களை விற்பனை செய்தது. குறைந்த நபர்களை அழைத்து மதுபாட்டில்களை விற்பனை செய்ததால் அங்கு குவிந்திருந்தவர்கள் கேண்டின் முன்பு கும்பலாக காத்திருந்தனர்.
இதற்கிடையில் ராணுவ கேண்டின் முன்பு அதிகளவில் கும்பல் கூடி இருப்பதாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல்தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பறக்கும் படை துணைவட்டாட்சியர் ராஜேஷ்பாபு தலைமையில் கடலூர் நகராட்சி அதிகாரிகள் கொண்ட குழுவினர் அங்கு சென்று ஊரடங்கு விதிமுறைகளை மீறி ராணுவ கேண்டின் முன்பு கூட்டம் கூடியதால் அந்த கேண்டினை மூடி சீல் வைத்தனர்.
இதுதொடர்பாக முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் கூறுகையில், “கூட்டத்தை குறைக்கும் வகையில் ராணுவ கேண்டினில் டோக்கன் கொடுத்து, பொருட்கள் வாங்க வர வேண்டிய தேதியையும் தெரிவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றார்.