

சேலம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்துள்ள நிலையில், ஏற்காட்டில் பெய்த கனமழையால் அங்குள்ள வனப்பகுதி ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
சேலம் மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்தது. நேற்று முன்தினமும் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக ஏற்காட்டில் 99.40 மிமீ மழை பதிவானது. தொடர்ந்து இரு தினங்களாக கனமழை பெய்ததால், ஏற்காட்டில் நீர்நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
ஏற்காடு வனப்பகுதியில் ஆங்காங்கே சிறு அருவிகள் தோன்றி, அவற்றில் நீர் கொட்டுகிறது. ஏற்காடு அடுத்த மஞ்சக்குட்டை என்ற இடத்தில் உள்ள ஓடை உள்ளிட்ட வனப்பகுதியில் உள்ள பல ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மழையால் ஏற்காட்டில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
நேற்று முன்தினம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம்: மேட்டூர் 34.80, காடையாம்பட்டி 26, சேலம் 10, வாழப்பாடி 5, எடப்பாடி 2 மிமீ மழை பதிவானது. பரவலாக பெய்த மழை காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது.