சேலம் அருகே வாகனச் சோதனையின்போது போதையில் வாக்குவாதம் - போலீஸார் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு : கொலை வழக்குப்பதிவு; சிறப்பு உதவி ஆய்வாளர் கைது

முருகேசன்
முருகேசன்
Updated on
2 min read

ஆத்தூர் அருகே வாகன சோதனையின்போது போதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயியை போலீஸார் தாக்கியதில் விவசாயி உயிரிழந்தார். இதுதொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த போலீஸார் சிறப்பு உதவி ஆய்வாளரை கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த பெத்தநாயக்கன்பாளையம் அருகே எடையப்பட்டி வில்வனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (40). விவசாயியான இவர் அதே ஊரில் சிறிய பெட்டிக்கடையும் நடத்தி வந்தார். முருகேசனுக்கு அன்னக்கிளி என்ற மனைவியும், ஜெயப்பிரியா (18), ஜெயபிருந்தா (17) என்ற மகள்களும், கவிப்பிரியன் (13) என்ற மகனும் உள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் மூடப்பட்டுள்ளதால் முருகேசனும் அவர்களது நண்பர்கள் சிலரும் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில், கல்வராயன் மலையில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதிக்கு மது அருந்தச் சென்றனர்.

மது அருந்திவிட்டு வீடு திரும்பியபோது, பாப்பநாயக்கன்பட்டி சோதனைச் சாவடியில் இருசக்கர வாகனத்தை போலீஸார் தடுத்தனர். மேலும், அவர்கள் மது கடத்தி வந்தனரா என விசாரித்தபோது, மது போதையில் இருந்த முருகேசன் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, பணியில் இருந்த ஏத்தாப்பூர் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி உள்ளிட்ட சில போலீஸார் முருகேசனை தாக்கினர். முருகேசனின் நண்பர்கள் இதை செல்போனில் பதிவு செய்தனர்.

இதில், முருகேசனை நண்பர்கள் இழுத்துச் செல்வதும், போதையில் கீழே விழும் அவரை சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி பிரம்பால் கண்மூடித்தனமாக தாக்குவதும்,திவாகரன் என்ற காவலர் இந்தக் காட்சிகளை செல்போனில் பதிவுசெய்யும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது.

படுகாயமடைந்த முருகேசன், தும்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், பின்னர் ஆத்தூர் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

முருகேசன் மரணத்துக்கு காரணமான போலீஸாரை கைது செய்ய வலியுறுத்தி, அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்தனர். ஏத்தாப்பூர் காவல் நிலையத்தைமுருகேசனின் உறவினர்கள், பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

இதுதொடர்பாக சேலம் சரக டிஐஜி மகேஸ்வரி மற்றும் சேலம் எஸ்பி அபிநவ் ஆகியோர் ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து, பெரியசாமி மீது, கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக, மாஜிஸ்திரேட் விசாரணையும் நடத்தப்படுகிறது.

இதனிடையே, உயிரிழந்த முருகேசனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி மற்றும் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக அவர்களிடம் அதிகாரிகள் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

முதல்வர் ஸ்டாலின் உறுதி

காயமடைந்த முருகேசனை அவரது நண்பர்கள் சிவன்பாபு, ஜெய்சங்கர் இருவரும் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் அதன்பின் ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சேர்த்துள்ளனர். இந்நிலையில் இன்று மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே முருகேசன் இறந்துள்ளார். விசாரணை நடந்து வருகிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்.

இதற்கிடையே, முருகேசன்குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது.

தலைவர்கள் கண்டனம்

‘காவலர்களுக்கு மனநல ஆலோசனை வேண்டும்'

காவலர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்க மாநிலம் முழுவதும் மாதம் ஒருமுறை மனநல ஆலோசனை வழங்குவதை கட்டாயமாக்க வேண்டும் என சேலம் மனநல மருத்துவர் மோகன வெங்கடாஜலபதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: கரோனா பெருந்தொற்று காலத்தில் காவலர்கள் விடுப்பு எடுக்க முடியாத சூழலில் முன்களப் பணியாளராக செயல்படுகின்றனர். இதனால் கூடுதல் பணி சுமைக்கு உள்ளாகியுள்ளனர்.

காவல் அதிகாரியின் மன அழுத்தத்தின் வெளிப்பாடே, இயலாத பொதுமக்கள் தவறு செய்யும்போது, அநாகரிகமாக பேசும்போது, அவர்கள் கோபத்தை வெளிக்காட்டி கடமை உணர்வை மறந்து, அதிகாரத்தை கையில் எடுத்து தாக்குதல் நடத்தும் அளவுக்கு சென்றுவிடுகின்றனர்.

இதுபோன்ற நிகழ்வுகள் வருங்காலத்தில் வராமல் தடுக்க காவல்துறையில் பணிபுரிவோருக்கு மன அழுத்தம் குறைக்க மாநிலம் முழுவதும் மனநல ஆலோசனைகளை மருத்துவர்கள் மூலம் மாதம் ஒருமுறை வழங்குவதை கட்டாயமாக்க வேண்டும்.

அனைத்து தரப்பு மக்களும் பிராணயாமம், எளிய உடற்பயிற்சி, தோட்டப் பராமரிப்பு, நல்ல புத்தகங்களை வாசிப்பது, நேர்மறை சிந்தனையை வளர்த்துக் கொள்வது, சமூக வலைதளங்களில் வரும் சிறந்த வீடியோ காட்சிகளை காண்பது, ஆரோக்கியமான, சத்தான உணவுகளை உட்கொள்வதன் மூலம் மன உளைச்சலில் இருந்து விடுபட்டு, இயல்பான சூழலை உருவாக்கிக் கொள்ள முடியும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in