

தி.மலை மாவட்டத்தில் 2,186 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 3 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் நேற்று தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை தாக்கத்தால் 2021-22 -ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெறாத நிலையில் அனைவரும் ‘ஆல் பாஸ்’ என்ற அடிப்படையில் மாணவ, மாணவிகள் அனை வரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள தனியார், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்காக விரைவில் கல்வி தொலைக்காட்சி மற்றும் இணையதளம் வழியாக பாடங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 2-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடங்களுக்கான காணொலிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இரு தினங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக ரூ.292 கோடி மதிப்பில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா பாடத்திட்ட புத்தகங்கள் வழங்கும் பணியை அவர் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், தி.மலை மாவட்டத்தில் பள்ளி மாணவர் களுக்கு விலையில்லா பாடப்புத் தகங்கள் வழங்கும் பணியை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
தி.மலை மாவட்டத்தில் உள்ள 2,186 பள்ளிகளைச் சேர்ந்த 3 லட்சத்து 6 ஆயிரத்து 802 மாணவர்களுக்கு நேற்று முதல் பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.