17 வயது சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம் :

17 வயது சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம் :

Published on

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 'ஹலோ திருவண்ணாமலை போலீஸ்' என்ற பெயரில், காவல்துறை சிறப்பு கட்டுப்பாட்டு அறை கடந்த 17-ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டுப்பாட்டு அறையை 99885-76666 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணுக்கு தொலைபேசி மற்றும் வாட்ஸ்-அப் வாயிலாக பொதுமக்கள் தொடர்பு கொண்டு சட்டம் -ஒழுங்கு, சட்ட விரோத குற்றங்கள் தொடர்பாக புகார் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வாட்ஸ்-அப் மூலம் நேற்று வரப்பெற்ற தகவலின்படி, 'திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் கணக்கன்குப்பம் கிராமத்தில் உள்ள  திரௌபதி அம்மன் கோயிலில் வரும் 28-ம் தேதி குழந்தை திருமணம் நடைபெற உள்ளது' என்ற தகவல் கிடைத்தது.

இந்த தகவலை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி உத்தரவின்பேரில், திருவண்ணாமலை நகர உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி மேற்பார்வையில் திருவண்ணாமலை கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் தனலட்சுமி தலைமையிலான காவலர்கள் மற்றும் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர் அடங்கிய குழுவினர் நேற்று விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இதில், 17 வயது சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சிறுமியை மீட்ட காவல் துறையினர் திருவண்ணாமலை பெரும்பாக்கம் சாலையில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக மங்கலம் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in