

சேலம் அருகே சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் ஏரியில் கலப்பதால் நிலத்தடி நீர் மாசடைவதாகவும், அதை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
சேலம் அம்மாப்பேட்டையை அடுத்த சன்னியாசிகுண்டு அருகே உள்ள குருவிப்பண்ணை ஏரியில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் கலப்பதால் நிலத்தடி நீர் மாசடைந்து வருவதாகக் கூறி ஏரி அருகில் உள்ள பாத்திமாநகர், கருப்பணார் கோயில் பகுதியைச் சேர்ந்த மக்கள் மாசடைந்த நீரை பாட்டிலில் எடுத்து வந்து சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது:
சன்னியாசிகுண்டு அருகேயுள்ள குருவிப்பண்ணை ஏரி அப்பகுதி மக்களுக்கு குடிநீர் மற்றும் விவசாயத்துக்கான நிலத்தடி நீருக்கு ஆதாரமாக இருந்து வருகிறது. இப்பகுதியில்1,500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். ஏரி அருகே செயல்படும் சாயப்பட்டறைகள் சில ரசாயனக் கழிவு நீரை சுத்திகரிக்காமல் ஏரியில் கலக்கின்றனர்.
இதனால், நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது. மேலும், கடந்த வாரம் ஏரியில் மீன்கள் செத்து மிதந்தன. இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தோம். இதைதொடர்ந்து போலீஸார் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஏரியில் ஆய்வு நடத்தினர். மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஏரி நீரின் மாதிரியை சேகரித்துச் சென்றனர்.
மேலும், கடந்த ஆண்டு நாங்கள் தெரிவித்த புகாரின் அடிப்படையில், 70 இடங்களில் நிலத்தடி நீர் மாதிரி எடுக்கப்பட்டது. அதில், நிலத்தடி நீர் மாசடைந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், சாயப்பட்டறைகள் மீது நடவடிக்கை இல்லை. இதனால், தற்போதும் ஏரியில் சாயப்பட்டறை கழிவு நீர் கலப்பது தொடர்கிறது.
ஏரி நீர் மற்றும் எங்கள் பகுதி நிலத்தடி நீர் மாசடைவதை தடுக்க சுத்திகரிக்கப்படாமல் சாயக்கழிவு நீரை கலக்கும் சாயப்பட்டறைகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, சாயப்பட்டறைகளுக்கு சீல் வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.