

ஈரோடு கலைமகள் பள்ளியில் செயல்பட்டு வந்த கரோனா ஸ்கிரீனிங் மையம், மாநகராட்சி திருமண மண்டபத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் கரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களுக்கு, நோய் தன்மையை அறிய ஈரோடு அரசு மருத்துவமனையிலும், பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்திலும் கரோனா ஸ்கிரீனிங் மையம் செயல்பட்டு வந்தது.
இந்த மையங்களில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு, ஆக்சிஜன் அளவு கண்டறிந்தும், சி.டி.ஸ்கேன் மூலம் நுரையீரல் பாதிப்பையும் கண்டறியப்பட்டு, நோயின் தன்மைக்கேற்ப மருத்துவமனை சிகிச்சைக்கும், வீட்டு தனிமையில் இருக்கவும் மருத்துவர்கள் பரிந்துரைத்து வந்தனர்.
இந்த ஸ்கிரீனிங் மையம் கடந்த 5-ம் தேதி, ஈரோடு மீனாட்சி சுந்தரனார் சாலையில் உள்ள அரசு உதவி பெறும் கலைமகள் மேல்நிலை பள்ளிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது. தற்போது பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் வருகையின் காரணமாகவும், சேர்க்கைக்கான வேலைகளிலும் பள்ளி நிர்வாகம் ஈடுபட உள்ளது. இதனால், இந்த மையம் மீண்டும் பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பள்ளியின் அறைகளிலும், வளாகத்திலும், சுற்றுப்புறத்திலும் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் கூறும்போது, தொற்றின் பாதிப்பு அதிகமுள்ள நாட்களில் இந்த ஸ்கிரீனிங் மையத்தில் தினமும் 200 பேர் வரை பரிசோதனை செய்து வந்தனர் தற்போது தொற்றின் தாக்கம் குறைந்து உள்ளதால் 50-க்கு கீழ் உள்ளவர்களே பரிசோதனை செய்து வருகின்றனர், என்றார்.