

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருநெல்வேலி மாவட்ட செயற்குழு கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.
மாவட்ட தலைவர் ஞா.கா. மைக்கேல் ஜார்ஜ் கமலேஷ் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் மு.பிரமநாயகம் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் செ.பால்ராஜ் வரவேற்றார். மாநில தலைவர் மூ. மணிமேகலை, செயலாளர் சோ. முருகேசன் ஆகியோர் விளக்க உரையாற்றினர்.
கடந்த ஜூன் 14-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர் சேர்க்கை மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழ் வழங்குதல், வகுப்பறை செயல்பாட்டுக்கு பள்ளியை ஆயத்தப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பொது போக்குவரத்து இன்னும் தொடங்கப்படாத நிலையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்று வருவதற்கு சங்கரன்கோவில், தென்காசி, அம்பாசமுத்திரம், திசையன்விளை, நாகர்கோவில் வழித்தடங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இம்மாத இறுதிக்குள் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.