

ஈரோட்டில் உள்ள நான்கு மையங்களில் கரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட மஞ்சள் ஏலம் நாளை (23-ம் தேதி) முதல் நடக்கிறது.
ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்குமுறைக்கூடம், ஈரோடு மற்றும் கோபி கூட்டுறவு சங்கங்களில் நடந்து வந்த மஞ்சள் ஏலம், கரோனா பரவல் காரணமாக மே மாதம் முதல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், வேளாண் பொருட்களை ஒழுங்கு முறை விற்பனைக் கூடம், கூட்டுறவு சங்கங்களில் ஏல முறை விற்பனை செய்யலாம் என அரசு தளர்வினை அறிவித்தது. இருப்பினும், ஈரோடு மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகமாக இருந்ததால், மஞ்சள் ஏலம் நடக்கவில்லை.
இந்நிலையில் நாளை (23-ம் தேதி) முதல் மஞ்சள் ஏலம் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி கூறியதாவது:
ஈரோட்டில் புதிய மஞ்சள் அறுவடை செய்யும் விவசாயிகள், அவற்றை குடோனில் பாதுகாத்து வைத்து வருகின்றனர். புதிய மஞ்சள் விதைப்பும் பல்வேறு பகுதியில் தொடங்கி உள்ளது. இந்நிலையில், மஞ்சள் ஏலத்தைத் தொடங்கினால் விவசாயத்துக்கான செலவினங்களை மேற்கொள்ள விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும்.
தற்போது, மகாராஷ்டிரா, தெலங்கானா மாநிலங்களில் மஞ்சள் ஏலம் நடந்து வருகிறது. இந்நிலையில், ஈரோட்டில் உள்ள நான்கு மையங்களிலும், மஞ்சள் ஏலத்தை நாளை (23-ம் தேதி) முதல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏலத்தில் பங்கேற்கும் விவசாயிகள், வணிகர்கள் உரிய பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.