

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாலூட்டும் தாய்மார்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது.
தமிழகத்தில் முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடும் பணியை டீன் நேரு தொடங்கி வைத்தார். உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மருத்துவமனையின் பேறுகால வார்டில் 30-க்கும் மேற்பட்ட பாலூட்டும் தாய்மார்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 6 பேர் மட்டுமே ஆர்வமுடன் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மற்றவர்கள் தயக்கம் காட்டினர். இதையடுத்து கரோனா தடுப்பூசியின் அவசியம் குறித்து அவர்களுக்கு கவுன்சலிங் அளிக்கப்பட்டு அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.