

கல்வி உதவித்தொகையாக ரூ.48 ஆயிரம் பெற வழிவகை செய்யும் வகையில் நடத்தப்படும் தேசிய வருவாய்வழி திறனறி தேர்வில் ஈரோடு மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் பலர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்கும்பொருட்டு, 8-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவி யருக்கு ஆண்டுதோறும் தேசிய வருவாய்வழி திறனறி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான நான்கு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000 வீதம், மொத்தம் ரூ.48 ஆயிரம் கல்வி உதவித்தொகை பெற முடியும்.
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற தேசிய வருவாய்வழி திறனறி தேர்வு முடிவுகள் இரு நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் பவானிசாகர் ஒன்றியம் வெங்கநாயகன் பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் ஸ்ருதிகா, இந்துமதி, சக்திஶ்ரீ, சீதாலட்சுமி, ரஞ்சனாதேவி ஆகிய 5 மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 7 ஆண்டுகளாக இந்த பள்ளி மாணவர்கள், இத்தேர்வில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று கல்வி உதவித்தொகை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், பவானிசாகர் ஒன்றியம் கோடேபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவர் ச.மோகன்பாபு 123 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் மூன்றாமிடம் பிடித்துள்ளார். இப்பள்ளி மாணவி இந்துமதி 122 மதிப்பெண்கள் பெற்று நான்காமிடம் பெற்றுள்ளார். இவர்களோடு, மாணவர்கள் ப. பாஸ்கர், ரோகித், யோகா, காவ்யா,சபரி சங்கர் ஆகியோரும் தேர்வு பெற்றுள்ளனர்.
தேசிய வருவாய்வழி திறனாய்வு தேர்வில் கடந்த 8 ஆண்டுகளாக கோடேபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் சாதனை படைத்து வருகிறது.
அதேபோல் கொத்தமங்கலம், தொப்பம்பாளையம், மாராயி பாளையம், ஓலப்பாளையம், நேரு நகர், புங்கார் ஊராட்சி ஒன்றிய பள்ளி என பல்வேறு அரசுப் பள்ளி மாணவர்கள் இத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இத்தேர்வு குறித்து கிராமப்புற பள்ளி மாணவர்களுக்குத் தெரிவித்து, அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து வெற்றிபெறச் செய்த அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு விடியல் சமூக நல அமைப்பினர் மற்றும் கல்வியாளர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.