

பாளையங்கோட்டையில் செயல்பட்டு வந்த மேடை காவல் நிலைய கட்டிடம் பழமை மாறாமல் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி புதுப்பிக்கப்பட உள்ளது. இந்த பணியை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பார்வையிட்டனர்.
பாளையங்கோட்டையில் பழங்கால கோட்டை கட்டிடத்தின் கீழ் பகுதியில் மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோயில், விநாயகர் கோயில் மற்றும் சில கடைகள் உள்ளன. இந்த பகுதி அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
மேல் பகுதி வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு மேடை காவல் நிலையம் செயல்பட்டு வந்தது. மாவட்ட குற்றப்பிரிவு உள்ளிட்ட சில சிறப்பு பிரிவுகள் இங்கு இயங்கின. அவை இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர், மேல் பகுதி பராமரிப்பின்றி கிடந்தது. இதனால் இந்த கட்டிடம் பாழடைந்து காணப்படுகிறது.
இந்த கோட்டை கட்டிடத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், வரலாற்று ஆய்வாளர்களும் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, இந்த கட்டிடத்தை பழமை மாறாமல் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதுப்பிக்க திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நடவடிக்கை எடுத்துள்ளார். கோட்டை கட்டிடத்தை ஆட்சியர் மற்றும் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.