

கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் கடந்த மே 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பேருந்து போக்குவரத்து நடைபெறவில்லை. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அவ்வப்போது அறிவிக்கப்பட்டாலும், பொது போக்குவரத்தை தொடங்க அரசு அனுமதி அளிக்க வில்லை. அதேநேரத்தில் அரசு பணியாளர் களுக்காக மட்டும் ஒருசில பேருந்துகள் தற்போது இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், நாளை முதல் ஊரடங்கில் மேலும் தளர்வு கள் அறிவிக்கப்படக்கூடும், பொது போக்கு வரத்தை சில கட்டுப்பாடுகளுடன் தொடங்க அரசு அனுமதி அளிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இதனால் அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் பேருந்துகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. பேருந்துகளை பராமரிக்கும் பணிகளில் பணியாளர்கள் கடந்த சில நாட்களாக ஈடுபட்டுள்ளனர். திருநெல்வேலி வண்ணார்பேட்டை தாமிரபரணி பணிமனையில் 62 வழித்தடங்களில் பேருந்துகளை இயக்கும் வகையில் பேருந்துகள் பராமரிக்கப்பட்டு தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. அரசு அறிவிக்கும் எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிகிறது.