

சேலத்தில் பசி இல்லா சேலம் இளைஞர் குழுவினர், சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு முடிதிருத்தி, உணவு வழங்கி வருகின்றனர்.
சேலத்தில் கரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், ஊரடங்கு வரும் 21-ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றவர்கள் உணவு கிடைக்காமல் சுருண்டு கிடக்கின்றனர். இவர்களின் பசியை போக்கும் விதமாக, ‘பசி இல்லா சேலம்’ இளைஞர் குழுவைச் சேர்ந்தவர்கள் சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு முடிதிருத்தி, குளிக்க வைத்து, புத்தாடை வழங்கி, உணவு கொடுத்து பசியாற வைத்து, காப்பகங்களில் சேர்த்து வருகின்றனர்.
இந்தக் குழுவினர் நேற்று சேலம் திருவள்ளுவர் சிலை அருகே சாலையோரத்தில் படுத்திருந்த இரண்டு ஆதரவற்ற முதியவர்களை குளிக்க வைத்து, புத்தாடை, உணவு வழங்கி, காப்பகத்தில் சேர்த்தனர். சேலம் ஜங்ஷன், ஐந்து ரோடு, அஸ்தம்பட்டி, டவுன் பகுதிகளில் ஆதரவற்ற நிலையில் உள்ளவர்களுக்கு தினமும் உணவு வழங்கி வருகின்றனர்.
மேலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி, மருந்து மாத்திரை, உணவு வாங்கி கொடுப்பது, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் குடியிருப்பவர்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் வாங்கி கொடுப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வருவதை பொதுமக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக ‘பசி இல்லா சேலம்’ இளைஞர் குழுவை சேர்ந்த அருண்குமார் கூறும்போது, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள் ளதால் ஆதரவற்றவர்கள் உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இவர்களின் பசியை போக்கிட ‘பசி இல்லா சேலம்’ குழுவினர் இணைந்து, சாலையோர முதியவர் களுக்கு தினமும் உணவு வாங்கி கொடுத்தும், கரோனா தொற்றால் பாதித்த குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறோம். கரோனா தொற்று முடிவுக்கு வரும் வரை, இப்பணியை தொடர்ந்து செய்திடுவோம், என்றார்.