

கொமதேக மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
பிரதமரைச் சந்தித்த தமிழக முதல்வர், கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இது கொங்கு மண்டல மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு கொங்கு மண்டலத்தை புறக்கணிக்கிறது என்று கூறியவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்தோம். அதற்காக போராட்டத்தை முன்னெடுத்தோம். மத்திய அரசு பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு ஆய்வு செய்து தயாராக இருந்தது. ஆனால் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் உட்பட, முன்னாள் அமைச்சர்கள் யாரும் இதை கண்டுகொள்ளவில்லை. அதன் பிறகு எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.
எய்ம்ஸ் மருத்துவமனை ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அமைக்கப்பட்டால், கொங்கு மண்டல மாவட்டங்கள் அனைத்துக்கும் மையமாக இருக்கும். பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு தேவையான வசதிகள் அனைத்தும் உள்ளன. எனவே,தமிழக முதல்வர் கோவைக்கான எய்ம்ஸ் மருத்துவமனை கோரிக்கையை, ஈரோடு பெருந்துறையில் அமைக்க பரிசீலிக்க வேண்டும்.