

மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களை பாதுகாக்க தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து விருதுநகரில் செய்தியாளர்களிடம் இந்திய மருத்துவ சங்க மாவட்ட இணைச் செயலாளர் அறம், மருத்துவ சங்க உறுப்பினரும் சாத்தூர் எம்எல்ஏவுமான ரகுராமன் மற்றும் நிர்வாகிகள் கூறியதாவது:
மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டில் கரோனா முதல் அலையில் 748 மருத்துவர்கள் உயிரிழந்தனர். இரண்டாவது அலையில் இதுவரை 730 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களது தியாகத்தை அறியாமல் உத்தரபிரதேசம், பிஹார், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மருத்துவர்கள், முன்களப் பணியாளர்கள் தாக்கப்படுகின்றனர். எனவே, மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள், பணியாளர்கள் பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும். மருத்துவமனையை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
அதன்பின், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர்.