

சித்தோடு பகுதியில் ஈரோடு - சத்தி சாலை மற்றும் கோவை - சேலம் நான்குவழிச்சாலையை இணைக்கும் சேவைச்சாலையை, இப்பகுதியில் விபத்தில் இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் மூலம் பயன்பாட்டுக் கொண்டு வரப்பட்டது.
சித்தோடு பகுதியில் ஈரோடு - சத்தியமங்கலம் சாலையையும், கோவை - சேலம் நான்கு வழிச்சாலையும் இணைக்கும் சேவைச்சாலை பணி பல ஆண்டுகளாக நிறைவடையாமல் இருந்தது.
இதன்காரணமாக, சித்தோடு நான்கு வழிச்சாலையில் 45-க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன. இது குறித்து வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, உடனடியாக சேவைச்சாலை பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
அரசு மற்றும் தன்னார்வலர்களின் உதவியோடு ரூ.40 லட்சம் மதிப்பீட்டில், இரு சாலைகளை இணைக்கும் தார்சாலைப்பணி நான்கு நாட்களில் முடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சித்தோடு தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் இறந்த தங்கராஜ் - சபரி குடும்பத்தைச் சார்ந்த பானுப்பிரியா, மகள் காவியா ஆகியோரைக் கொண்டு இச்சாலை நேற்று, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதிய சாலை குறித்து அதிகாரிகள் கூறும்போது, சித்தோடு நான்குவழிச்சாலை பகுதியில் விபத்துகளைத் தவிர்க்கும் வகையில், இந்த சேவைச்சாலை துரிதமாக அமைக் கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பேரோட்டில் இருந்து நேரடியாக சித்தோடு செல்லும் வழி அடைக்கப்படும். இதனால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இருக்காது, என்றனர்.
தொடர்ந்து, சித்தோடு தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் அமைச்சர் முத்துசாமி மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.