மாணவர்கள் கல்வி கடன் பெற உதவி மையம் தொடங்க நடவடிக்கை : சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல்

மாணவர்கள் கல்வி கடன் பெற உதவி மையம் தொடங்க நடவடிக்கை  :  சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல்
Updated on
1 min read

உயர் கல்வி பயிலும் மாணவர்கள் கல்வி கடன் பெற தேவையான உதவிகள் வழங்கிட உதவி மையம் தொடங்கப்படவுள்ளது என சேலம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் கல்வி கடன் வழங்குவது தொடர்பாக வங்கியாளர்கள், அரசு மற்றும் தனியார் கல்லூரி நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஆட்சியர் கார்மேகம் தலைமை வகித்துப் பேசியதாவது:

கல்வி கடன் வழங்குவதன் மூலம் உயர்கல்வி பயில இயலாமல் இடைநிற்கும் மாணவ, மாணவியர்களின் விகிதத்தை குறைக்க முடியும். மாவட்ட அளவில் கல்வி கடன் பெற விரும்பும் மாணவ, மாணவியர்களுக்கு உதவி செய்யும் விதமாக உதவி மையம் தொடங்கப்படவுள்ளது.

இதன் மூலம் மாணவ, மாணவியர்கள் கல்வி கடன் பெற தேவைப்படும் ஆவணங்கள் தொடர்பாக அவர்களுக்கு தேவைப்படும் ஆலோசனைகளை பெறலாம். வங்கியாளர்கள் கல்வி கடன் பெற வரும் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி கடன் தொடர்பான தெளிவான விவரங்களையும், அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் தொடர்பாக தெளிவாக விளக்க வேண்டும்.

மாவட்ட அளவில் கல்வி நிறுவனங்கள் மற்றும் வங்கியாளர்களை ஒருங்கிணைக்க திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) பொறுப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரை 94440 94335 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹமான், உதவி ஆட்சியர் (பயிற்சி) முகமது சபிர் ஆலம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in