உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் பெறப்பட்ட - தகுதியான மனுக்களுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் : அலுவலர்களுக்கு ஈரோடு ஆட்சியர் அறிவுறுத்தல்

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் பெறப்பட்ட -  தகுதியான மனுக்களுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் :  அலுவலர்களுக்கு ஈரோடு ஆட்சியர் அறிவுறுத்தல்
Updated on
1 min read

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்பட்டால், அதற்கான காரணத்தை அலுவலர்கள் தயாராக வைத்திருக்க வேண்டும், என ஈரோடு ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி தெரிவித்தார்.

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி தலைமையில், ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டம் குறித்து அனைத்துத்துறை உயர் அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தின் கீழ், பொதுமக்களிடம் பெறப்பட்ட அனைத்து மனுக்களும் மாவட்ட வாரியாக, வகை வாரியாக பிரிக்கப்பட்டு, வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

ஒவ்வொரு மனுவுக்கும் அடையாள எண் வழங்கப்பட்டு, அடையாள எண்ணுடன் கூடிய குறுஞ்செய்தி மனுதாரருக்கு அனுப்பப்படுகிறது.

மனுக்களில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் அதன் உண்மை தன்மைக்கேற்றவாறு தகுதியான ஒவ்வொரு மனுவும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உடனடி தீர்வு காண அனைத்துத்துறை உயர் அலுவலர்களும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பெறப்பட்ட மனுக்களில், தகுதியான மனுக்களில் தேவையான ஆவணங்கள் விடுபட்டு இருந்தால், அவற்றை உரிய முறையில் பெற்று மனுக்களின் மீது உடனடி தீர்வு காண வேண்டும். மேலும், தகுதியில்லாத மனுக்கள் நிராகரிக்கப்படும் போது, அவற்றிற்கான காரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பிரத்திக்தயாளர், மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in