

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்த 140 பேரின் சமூக பொருளாதார அறிக்கை தயார் செய்யப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில், குழந்தைகள் நலபாதுகாப்பு அலகு சார்பில் பணிக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடந்தது. அப்போது ஆட்சியர் பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்த 228 நபர்களில் 140 பேரின் சமூக பொருளாதார அறிக்கை தயார் செய்யப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் 39 குழந்தைகள், தாய் மற்றும் தந்தை மட்டும் உள்ள குழந்தைகளாக கண்டறியப்பட்டுள்ளனர். கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் குழந்தைகளுக்கு உதவ ஏதுவாக மாவட்ட சைல்டு லைன் 1098, அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவற்றை தொடர்பு கொள்ளும் வகையில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டதின் காரணமாக அரசால் வழங்கப்படும் நிதி தொடர்புடைய குழந்தைகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் போது அந்த வைப்பு நிதியானது பெற்றோர்களின் கடன் அல்லது மற்ற வகையில் பிடித்தம் செய்யாமல் இருப்பது உறுதி செய்யப்படும். மேலும், பெற்றோரை இழந்த குழந்தைகளின் உதவித்தொகை அவர்களது கல்வி மற்றும் வளர்ச்சி மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுவின் மூலம் கண்காணிக்கப்படும், என்றார்.
இக்கூட்டத்தில் ஏடிஎஸ்பி ராஜூ, மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் பரமசிவன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன், மாவட்ட சமூக நல அலுவலர் பூங்குழலி உள்ளிட்ட துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.