கரோனா பரவல் அதிகமாக உள்ளதால் - கிராமங்களில் மக்கள் கூடுவதை தடுக்க குழு அமைத்து கண்காணிப்பு : ஈரோடு எஸ்.பி.சசிமோகன் தகவல்

கரோனா பரவல் அதிகமாக உள்ளதால் -  கிராமங்களில் மக்கள் கூடுவதை தடுக்க குழு அமைத்து கண்காணிப்பு :  ஈரோடு எஸ்.பி.சசிமோகன் தகவல்
Updated on
1 min read

ஈரோடு மாவட்ட கிராமப்பகுதி களில் பொதுமக்கள் கூடுவதைத் தடுக்க, கிராம கமிட்டிகள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எஸ்பி சசிமோகன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டத்தில் நகரப்பகுதிகளைக் காட்டிலும், கிராமங்களில் கரோனா பரவல் அதிகமாக உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த வீடுதோறும் சென்று கரோனா தொற்றினைக் கண்டறியும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், காவல்துறை தரப்பிலும் கரோனா பரவலைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக மாவட்ட எஸ்பி சசிமோகன் கூறியதாவது:

கரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கிராமப் பகுதிகளில் மக்கள் குறிப்பிட்ட இடங்களில் கூட்டமாகக் கூடி பேசி வருகின்றனர். கிராமப்புறங்களில் நடக்கும் திருமணங்கள், துக்க நிகழ்வுகளில் விதிமுறைகளை மீறி அதிக அளவில் மக்கள் கூடுகின்றனர். இவையே கிராமங்களில் கரோனா பரவலுக்கு பிரதான காரணமாக அமைகிறது.

எனவே, கிராமங்களில் பொதுமக்கள் ஓரிடத்தில் கூடுவதைத் தடுக்க, காவல்துறையினர் மற்றும் கிராம முக்கிய நபர்களைக் கொண்ட கிராமக் கமிட்டி அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது. இவர்கள் அளிக்கும் தகவலின் படி, வருவாய்த்துறை, சுகாதாரத் துறையினர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, விழிப்புணர்வை ஏற்படுத்துவர். போலீஸார் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களுக்குச் சென்று கண்காணிக்கவும், பொதுமக்கள் ஒன்றாக சமூக இடைவெளியின்றி கூடுவதை தடுக்கவும் மொபைல் குழு அமைத்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in