

கலப்பட கருப்பட்டி தயாரிப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 92 டன் சர்க்கரையை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் உள்ள ஆலைகளில் சர்க்கரையை பயன்படுத்தி கலப்பட கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டு தயாரிக்கப்படுவதாக புகார் எழுந்தது. உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் மாரியப்பன் தலைமையிலான அலுவலர்கள், அங்கு நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், 5 ஆலைகளில் கலப்படம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 1,340 மூட்டை (67 டன்) வெள்ளை சர்க்கரை மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.23.25 லட்சம். இந்த ஆலைகளுக்கு வெள்ளை சர்க்கரை விநியோகம் செய்த மொத்த விற்பனை நிறுவனத்திலும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அந்தநிறுவனம் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் இன்றி செயல்பட்டது தெரியவந்தது. அங்கு உரிய ரசீதுகள் இல்லாமல் சுகாதாரமற்ற முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 டன் வெள்ளை சர்க்கரை பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 8.5 லட்சம்.
தற்போது, உடன்குடி கருப்பட்டி கிலோ ரூ.300 வரை விற்கப்படுகிறது. ஒரு கிலோ சர்க்கரை அதிகபட்சம் ரூ.40-க்கு கிடைக்கும் நிலையில், கருப்பட்டி தயாரிக்க பதநீரை காய்ச்சும்போது, அதனுடன் வெள்ளை சர்க்கரையை அதிகம் கலந்து, ரசாயன நிறமியைச் சேர்த்து போலி கருப்பட்டி தயாரிப்பதை சிலர் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். உடன்குடி பகுதியில் போலி கருப்பட்டி மற்றும் போலி பனங்கற்கண்டு தயாரிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று, உயர் நீதிமன்ற மதுரை கிளை சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.