கடம்பூர் மலைப்பகுதியில் : கர்நாடக மதுபானங்களை கடத்திய வேட்டைத்தடுப்புக் காவலர்கள் கைது :

கடம்பூர் மலைப்பகுதியில் : கர்நாடக மதுபானங்களை கடத்திய  வேட்டைத்தடுப்புக் காவலர்கள் கைது  :
Updated on
1 min read

கர்நாடகாவில் இருந்து மதுபாட்டில்களைக் கடத்தி வந்த 5 வேட்டைத்தடுப்புக் காவலர்கள் உட்பட 6 பேரை கடத்தூர் போலீஸார் கைது செய்தனர்.

கரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. தமிழகத்தில் ஊரடங்கு அமலுக்கு வந்ததுமுதல், கர்நாடகாவில் இருந்து ஈரோடு மாவட்டம் வழியாக மதுபானங்கள் கடத்தப்படுவது தொடர்ந்து வருகிறது.

காய்கறி வாகனங்கள் மற்றும் சரக்கு லாரிகளில் மறைத்து எடுத்துவரப்படும் கர்நாடக மாநில மதுபானங்கள், இந்த மாவட்டங்களில் அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. அந்தியூர், ஆசனூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள சோதனைச்சாவடிகளில் கர்நாடக மாநில மதுபானங்கள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில், போலீஸார் வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். அப்போது மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேரிடம் இருந்து 193 கர்நாடக மாநில மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், பார்த்திபன் (43), சக்திவேல் (29), மயில்சாமி (31), ராமசாமி (42), சூரிய பிரகாஷ் (22), ராகுல் (21) என்பதும், இதில் ராகுலைத் தவிர மீதமுள்ள ஐவரும் வனத்துறையில் பணிபுரியும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் என்பதும் தெரியவந்தது.

கர்நாடக மாநிலம் ஜல்லிபாளையத்தில் இருந்து மதுபானங்களை வாங்கிவந்து, சத்தியமங்கலத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. 6 பேரையும் கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in