

கிருஷ்ணகிரி அடுத்த தேவசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட அக்ரஹாரம் கிராமத்தில் இருந்து, தேசிய நெடுஞ்சாலை வரை, 1 கிலோ மீட்டர் தொலைவிற்கு, எஸ்சிபிஏஆர் திட்டத்தின் கீழ், ரூ.42.20 லட்சம் மதிப்பில் கடந்த ஒரு வாரமாக தார்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அரசின் விதிமுறைகளின்படி இச்சாலை 5 செ.மீ., உயரம் அமைக்க வேண்டும். ஆனால் இந்த சாலை 1.5 செ.மீ., உயரம் மட்டுமே அமைக்கப்பட்டு வருவதாக புகார் தெரிவித்த அப்பகுதி மக்கள் சாலை அமைக்கும் பணியை நிறுத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் முறைகேடாக தரமற்ற முறையில் சாலை அமைப்பதைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். இதையடுத்து, இளநிலை உதவியாளர் தமிழ்செல்வி, ஆர்.ஐ., விஜயராஜ் ஆகியோர் நேரில் சென்று சாலையை ஆய்வு செய்தனர். இதில், 1.5 செ.மீ., உயரம் மட்டுமே சாலை அமைந்து வருவதால், ஒப்பந்ததாரர்களை கண்டித்தனர். மேலும், அரசின் விதிமுறைப்படி 5 செ.மீ., தார்சாலை அமைக்க வேண்டும் என்று அவர்களுக்கு உத்தரவிட்டனர்.
இதனால் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.