

அய்யர்மலை ரோப் கார் திட்டப் பணிகள் நிகழாண்டு இறுதிக்குள் நிறைவடையும் என மாநில இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தெரிவித்தார்.
திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் நேற்று ஆய்வு செய்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயில், திருநீர்மலை கோயில், திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயில், திருத்தணி முருகன் கோயில், திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில் ஆகிய 5 இடங்களில் ரோப் கார் வசதி அமைக்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது மலைக்கோட்டை கோயிலில் ஆய்வு செய்துள்ளேன்.
தமிழகத்தில் ஏற்கெனவே சைவ, வைணவத்துக்கு 6 பள்ளிகள் உள்ளன. விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, அந்தப் பள்ளிகளைச் சீரமைத்து மீண்டும் ஆகம பயிற்சி வகுப்புகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா பரவல் கட்டுக்குள் வந்த பிறகு கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படும்.
இந்துக்களின் முறை வழிபாடு எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் இந்து சமய அறநிலையத் துறை தலையிட முடியும் என்றார்.
ஆய்வின்போது, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், எம்எல்ஏ எஸ்.இனிகோ இருதயராஜ், அறநிலையத் துறை திருச்சி மண்டல இணை ஆணையர் அர.சுதர்சன், ரங்கம் கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, மலைக்கோட்டை கோயில் செயல் அலுவலர் த.விஜயராணி உடனிருந்தனர்.
பின்னர், கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் ரோப்கார் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியது:
அய்யர்மலை ரோப்கார் சேவை நிகழாண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும். இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இடத்தில் குளித்தலை புதிய பேருந்து நிலையத்தை அமைப்பது தொடர்பாக, சட்டத்துக்குட்பட்டு ஆய்வு செய்து, விரைவாக இடம் வழங்கப்படும் என்றார். அப்போது, ஆட்சியர் பிரபுசங்கர், எம்எல்ஏ இரா.மாணிக்கம் உடனிருந்தனர்.