

கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மீதானகுற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் சங்கங்களைக் கலைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு, உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கூட்டுறவு சங்கங்களின் தற்போதைய நிர்வாகத்தைக் கலைத்துவிட்டு விரைவில் புதிதாக தேர்தல் நடத்த அரசு கொள்கை முடிவு எடுக்க உள்ளதாக தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆய்வுக்கு சென்றபோது, தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களைக் கலைக்க எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம், கடலூர், திருச்சி என பல்வேறு கூட்டுறவு சங்க நிர்வாகிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
அதில், ‘‘கடந்த 2018-ம் ஆண்டுநடந்த கூட்டுறவு சங்கத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் வரும் 2023-ம் ஆண்டுவரை உள்ள நிலையில் சங்கங்களைக் கலைக்கும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்’’ என கோரப்பட்டு இருந்தது.
இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பாக நேற்று நடந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எச்.அரவிந்த் பாண்டியன் மற்றும் வழக்கறிஞர் எல்.பி.சண்முகசுந்தரம் ஆகியோர் ஆஜராகி, ‘‘தேர்ந்தெடுக்கப்பட்ட சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் இன்னும் முடிவடையாத நிலையில் அந்த சங்கங்களை அரசியல் உள்நோக்கத்துடன் கலைக்க முயற்சித்து தேர்தல் நடத்துவது என்பதுசட்டவிரோதமானது. இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. எனவே கூட்டுறவு சங்கங்களைக் கலைக்கும் அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்’’ என வாதிட்டனர்.
அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, ‘‘கூட்டுறவுச் சங்க நிர்வாகிகள் முறைகேடுகளில் ஈடுபட்டதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், கூட்டுறவுச் சங்க விதி 88-ன் படி சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் சங்கங்களைக் கலைப்பதற்கும் அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது’’ என்றார்.
இதுதொடர்பாக அரசின் எழுத்துப்பூர்வமான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூன் 29-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், கூட்டுறவுச் சங்க விதி 88-ன்படி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் சங்கங்களைக் கலைப்பதற்கும் அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது.