

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் மின் கட்டணம்செலுத்த கால அவகாசம் தேவைப்படாது என கருதுவதாக மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
கரூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: மின்கட்டணம் செலுத்த ஏற்கெனவே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு தொழில் நிறுவனங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. அதனால், மின் கட்டணம் செலுத்த மேலும் கால அவகாசம் தேவைப்படாது என்று கருதுகிறேன்.
கடந்தாண்டு கரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அப்போது, அதிமுக கூட்டணியில் இருந்த பாமக அமைதியாக இருந்தது. தற்போது டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு எதிராக குரல் கொடுக்கிறது.
வெளி மாநிலங்களில் இருந்துமதுபானங்கள் கடத்தல், கள்ளச்சாராய விற்பனை போன்ற காரணங்களால் தான் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. பாஜகவும் டாஸ்மாக் கடை திறப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. அவர்களுக்கு மக்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கவேண்டும். அனைத்து தரப்பு மக்களும் பாராட்டக்கூடிய நல்ல அரசை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழி நடத்திக் கொண்டு இருக்கிறார் என்றார்.