

இதுகுறித்து சைமா தலைவர் அஷ்வின் சந்திரன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
2021-22-ம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் இறக்குமதி செய்யப்படும் பருத்தியின் மீது விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத பி.எஸ்.டி., 5 சதவீத ஏ.ஐ.டி.சி. மற்றும் செஸ் போன்ற இறக்குமதி வரிகளால் இந்திய பருத்தி விவசாயிகளுக்கு எந்த நன்மையும் கிடைக்காது. மாறாக, உற்பத்தி விலை அதிகமாகி, நமது ஏற்றுமதியாளர்கள் பன்னாட்டு அளவில் போட்டியிடும் திறனை இழக்க செய்துள்ளது.
மேலும், கடந்த ஆண்டின் கரோனா பெருந்தொற்றாலும், அதனை தொடர்ந்து அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தாலும் மிகுந்த இழப்பை சந்தித்துவரும் இந்திய ஜவுளித் துறைக்கு இறக்குமதி வரி பெரும் சுமையாக அமைந்துள்ளது. எனவே, வரிகளை விலக்கி இந்திய ஜவுளித் தொழிலுக்கு மூலப்பொருள் விவகாரத்தில் ஒரு சமதளத்தை உருவாக்க வேண்டும்.
நமது போட்டி நாடுகளான சீனா, வங்கதேசம், பாகிஸ்தான், வியட்நாம் மற்றும் இலங்கையில் பருத்தி இறக்குமதிக்கு எந்தவொரு வரியும் விதிப்பதில்லை. இதோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் கடந்த நிதிநிலை அறிக்கையில் பருத்தி மீது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரி கவலைக்குரியதாகும். எனவே, மத்திய நிதியமைச்சர் போர்க்கால அடிப்படையில் பருத்தியின் மீதான இறக்குமதி வரிகளை திரும்ப பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.