

திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனித் திருவிழா பூஜைகளுடன் நேற்று தொடங்கியது. கரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற இத் திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனித் திருவிழா சிறப்பாக கொண்டாடப் படும். கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கு காரணமாக இத் திருவிழா விமரிசையாக நடத்தப்படவில்லை. பக்தர்களுக்கும் அனுமதி அளிக்கப் படவில்லை. இந்நிலையில், 2-வது ஆண்டாக ஆனித்திருவிழா நிகழ்ச்சிகளுக்கு அறநிலையத் துறை தடைவிதித்துள்ளது. அதேநேரத்தில் சிறப்பு பூஜைகளுடன் பக்தர்கள் அனுமதியின்றி விழா நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆனித்திருவிழா நேற்று தொடங்கியது. இதையொ ட்டி காலை 10 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. கரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்பட வில்லை. இதனால் கோயிலுக்கு வெளியே நின்று பக்தர்கள் வழிபட்டு சென்றனர். இத் திருவிழா வரும் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் காலையில் கும்பம் வைத்து, வேள்வி செய்து சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. மேலும் இரவு 7 மணிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெறுகிறது.