

கடலூர் மாவட்டத்தில் நாளை முதல் ரேஷன் கடைகளில் 2-வது தவணையாக கரோனா நிவாரணம் பெற வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கப்பட்டது.
கரோனா நிவாரணமாக முதல்வர் ஸ்டாலின் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 4 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இதில் முதல் தவணையாக கடந்த மே மாதம் ரூ.2,000 வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இரண்டாவது தவணையாக ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு நாளை முதல் ரேஷன் கடைகளில் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் 7 லட்சத்து 50 ஆயிரத்து 491 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளன. இதையொட்டி கடந்த 11-ம் தேதி தொடங்கி இன்று வரை (14-ம் தேதி) ரேஷன் கடை பணியாளர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று மாவட்டத்தில் உள்ள 1,420 ரேஷன் கடைகளிலும் ஊழியர்கள் மதியத்திற்கு பிறகு வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணியை தொடங்கினர். இதற்கு முன்பு நாள் ஒன்றுக்கு 200 பேர் ரேஷன்கடைகளில் பொருட்கள் வாங்கி கொள்ளும் வகையில் டோக்கன் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது, பொருட்கள் முழுமையாக வரவில்லை என்பதால் நாள் ஒன்றுக்கு 75 முதல் 100 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படுகிறது.
இதேபோல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் ரேஷன் கடைகளுக்கு 14 வகையான மளிகைப் பொருட்கள், அதை பெறுவதற்கான பைகளும் அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது.