

தமிழக அளவில் கரோனா தொற்று பாதிப்பில் ஈரோடு மாவட்டம் இரண்டாமிடம் வகிக்கிறது. மருந்து பற்றாக்குறையால் கடந்த ஒரு வாரமாக தடுப்பூசி போடும் பணி நிறுத்த பட்டிருந்தது. இதுவரை 2.43 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரோட்டுக்கு 13 ஆயிரத்து 840 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளன. தடுப்பூசி அனைத்தும், ஆரம்ப சுகாதார மையங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டு, மாவட்டம் முழுவதும் 42 இடங்களில் நேற்று தடுப்பூசி போடப்பட்டது.
ஈரோடு மாநகராட்சியில் உள்ள 10 ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடுவதற்கு, நேற்று அதிகாலை 5 மணி முதல் பொதுமக்கள் குவியத்தொடங்கினர். காலை 6 மணிக்கே தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. கூட்டம் அதிகமாக இருந்ததால், அருகில் உள்ள பள்ளிகளிலும் தடுப்பூசி போடப்பட்டது. இதேபோல் இன்றும் மாவட்டம் முழுவதும் தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.