சேலம் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் - பிற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆலோசனை : அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

சேலம் மாவட்ட அரசு மருத்துவமனைகளில்  -  பிற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆலோசனை :  அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
Updated on
1 min read

கரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், சேலம் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களை இரும்பாலை கரோனா சிகிச்சை மையத்துக்கு மாற்றிவிட்டு, அரசு மருத்துவமனைகளில் பிற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சேலத்தில் செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு பாதிக்கும் கீழே குறைந்து விட்டது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை தொற்று காலத்திலும் முதல்வர் நிறைவேற்றி வருகிறார்.

டாஸ்மாக் கடைகளை மட்டுமே திறக்க அனுமதி கொடுக்கப் பட்டதுபோல, சிலர் சித்தரிக்கின்றனர். தொற்று பாதிப்பு குறைந்துள்ள 27 மாவட்டங் களில் அரசின் கட்டுப்பாடுகளை பின் பற்றி செயல்பட வேண்டும் என்ற உத்தரவுடன் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவுள்ளன.

தொற்று பாதிப்பு அதிகமுள்ள சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி யில்லை. ஆனால், கடந்த ஆட்சியின் போது, தொற்று பாதிப்பு அதிகம் இருந்தபோது டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டிருந்தன.

கர்நாடகாவில் தினசரி தொற்று பாதிப்பு 29.67 சதவீதம். ஆனால், அங்கு மதுக்கடைகள் காலை6 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட்டன. இப்போது தான், மதியம் 2 மணி வரை என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில்தொற்று பாதிப்பு 8 சதவீதமாக குறைக்கப்பட்ட பின்னர்டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பாஜக-வுக்கு தமிழக மக்கள் மீது அக்கறை இருந்தால், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்த வேண்டும்.

கடந்த 2008-ம் ஆண்டு ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 145 டாலர். அப்போது பெட்ரோல் விலை லிட்டர் ரூ.47.50, டீசல் விலை ரூ.30.50. இப்போது கச்சா எண்ணெய் பேரல் 46 டாலர், ஆனால் பெட்ரோல் லிட்டர் ரூ.98, டீசல் ரூ.92. இந்த விலை உயர் வினால் அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களை, இரும்பாலை சிகிச்சை மையத்துக்கு மாற்றவும், அரசு மருத்துவமனைகளில் பிற நோய்களுக்கு சிகிச்சை அளிக்க வும் ஆலோசித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in