

இறைச்சிக் கழிவுகளை சாலையோரத்தில் கொட்டினால் கடைக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் தெரி வித்துள்ளது: திருச்சி மாநகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் மீன் கடைகள், கோழிக் கடைகள், இறைச்சிக் கடைகளை நடத்துவோர், கழிவுகளை ஆங்காங்கே உள்ள நீர்நிலைகள், காலி இடங்கள் மற்றும் சாலையோரங்களில் கொட்டி சுகாதார கேடு ஏற்படுத்துவதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதைத் தவிர்க்கும் வகையில் திருச்சி மாநகராட்சி பகுதிகளில் உள்ள நுண்உர செயலாக்க மையங்களில் இறைச்சிக் கழிவுகளை பெறுவதற்கென பிரத்யேக தொட்டி வைக்கப்பட்டுள்ளது.
எனவே, அனைத்து இறைச்சிக் கடை உரிமையாளர்கள் தங்கள் கடைகளில் தினசரி சேகரமாகும் இறைச்சிக் கழிவு களை அருகிலுள்ள நுண்உர செயலாக்க மையங்களில், தங்களது சொந்த பொறுப்பில் நேரடியாக கொண்டு சென்று ஒப்படைக்க வேண்டும். இறைச்சிக் கழிவுகளை நுண்உர செயலாக்க மையங்களில் ஒப்படைக்காமல், பொது இடங்கள், நீர்நிலைகள், காலி இடங்கள் மற்றும் சாலையோரங்களில் கொட்டினால் அபராதம் விதிப்பதுடன் சம்பந்தப்பட்ட நபரின் இறைச்சிக் கடையும் பூட்டி சீல் வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.