

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் நவநீதம் நகரைச் சேர்ந்தவர் நாய்க்குட்டி என்ற விஜயகுமார் (23). இவர் நேற்று முன்தினம் மாலை கம்மியம்பேட்டை ஜெ.ஜெ.நகரில் உள்ள அய்யனார் கோயில் அருகே நடந்துச் சென்றார். அங்கு, அதே பகுதியைச் சேர்ந்த பாலா என்ற பாலமுருகன் (21) நின்று கொண்டிருந்தார். முன்விரோதம் காரணமாக இருவருக்கும் திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும்செல்போனில் தங்களது நண்பர்களை தொடர்பு கொண்டு சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர். பின்னர் இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் ஒருவரையொருவர் திட்டி கத்தியுடன் மோதிக்கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர். தகராறில் ஈடுபட்டவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இருதரப்பினரும் தனித்தனியாக அளித்த புகாரின் அடிப்படையில் இருதரப்பைச் சேர்ந்த 9 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதில் விஜயகுமார், விஜய்( 17) மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள் மற்றும் பாலமுருகன், கம்மியம்பேட்டையைச் சேர்ந்த கருப்பு என்ற கண்ணன் (24), வீரமணி (26) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும்இதுதொடர்பாக 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். இருதரப்பினர் கத்தியுடன் மோதிக்கொண்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.