கரோனாவால் பெற்றோரை இழந்த - 2,309 குழந்தைகளுக்கு விரைவில் வைப்புத் தொகை : அமைச்சர் கீதாஜீவன் தகவல்

கோவில்பட்டி நகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு கரோனா நிவாரணப் பொருட்களை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
கோவில்பட்டி நகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு கரோனா நிவாரணப் பொருட்களை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
Updated on
1 min read

‘‘கரோனாவால் பெற்றோரை இழந்த 2,309 குழந்தைகளுக்கு வைப்புத்தொகை வழங்கும் திட்டத்தை விரைவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைப்பார்’’ என அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.

தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டியில் மகளிர் திட்டத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் நலிவடைந்தவர்கள் 250 பேருக்கு கரோனா நிவாரணப் பொருட்களை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் தலைமை வகித்தார்.

பின்னர் அமைச்சர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட தொடர் நடவடிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் தினசரி 1,300 ஆக இருந்த கரோனாபாதிப்பு தற்போது 250 ஆக குறைந்துள்ளது. மக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் மாவட்டத்தில் கரோனா இல்லை என்ற நிலை உருவாகும். மூன்றாவது அலை வந்தாலும் அதை சமாளிப்பதற்கு முதல்வரின் உத்தரவுப்படி மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது.

ஊரடங்கு காரணமாக நுண் நிதி நிறுவனங்கள் கடன் தொகையை செலுத்த 6 மாதம் அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் ஏற்கெனவே அறிவுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கும் கடிதம் எழுதியுள்ளார். இதை மீறி யாராவது செயல்பட்டால் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை பாதுகாப்போம் என மத்திய அரசுக்கு முன்பாகவே தமிழக முதல்வர் அறிவித்துவிட்டார். அதன்படி குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. கணக்கெடுப்பு தொடர்பாக அதற்கான இணையதளத்தில் தினமும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. கரோனாவால் தாய், தந்தை இருவரையும் இழந்த 69 குழந்தைகள், பெற்றோரில் ஒருவரை இழந்த 2,240 குழந்தைகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களுக்கான வைப்புத் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்.

மின்சாரம் உற்பத்தி முறையாக நடக்கிறது. மின்வெட்டு ஏற்பட்டால் உடனடியாக அதனை சீர்செய்ய வேண்டும் என மின்வாரிய ஊழியர்களை அரசு அறிவுறுத்தி உள்ளது என்றார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in