ஈரோடு குப்பைக்கிடங்கில் இருந்து - கழிவுகளை ஏற்றி வந்த லாரிகளை சிறைபிடித்து மக்கள் போராட்டம் :

ஈரோடு குப்பைக்கிடங்கில் இருந்து  -  கழிவுகளை ஏற்றி வந்த லாரிகளை சிறைபிடித்து மக்கள் போராட்டம்  :
Updated on
1 min read

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட குப்பைக் கிடங்கில் இருந்து கழிவுகளை சின்னியம்பாளையத்தில் கொட்டுவதால், நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக கூறி பொதுமக்கள் லாரிகளை சிறை பிடித்தனர்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயிக்குச் சொந்தமான விவசாய நிலம் அம்மன் நகர் பகுதியில் உள்ளது. இவரது நிலத்தில் பாறைக்குழி உள்ளது. இதனை மூடுவதற்காக, ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வெண்டிபாளையம் குப்பைக் கிடங்கிலிருந்து கழிவுகளை லாரிகள் மூலம் எடுத்து வந்து பாறைக்குழியை மூடும் பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது.

பாறைக்குழியில் கொட்டப்படும் கழிவுகளால் அப்பகுதியிலுள்ள ஆழ்துளை கிணறு ஆகியவைகளில் கலந்து விடுவதாகக்கூறி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர்குப்பைக் கழிவுகளை ஏற்றி வந்த 8 லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த மொடக்குறிச்சி போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், அம்மன்நகர், முத்துக்கவுண்டன்பாளையம், சின்னியம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இங்கு கொட்டப்படும் கழிவுகளால் நிலத்தடி நீர், ஆழ்குழாய் கிணறுகள், கிணறுகள் போன்றவற்றில் கலந்து குடிநீர் மாசு ஏற்படுகிறது. ஏற்கெனவே கொட்டப்பட்ட கழிவுகளை அகற்றியும் இனிமேல் குப்பை கழிவுகளை கொட்டாதவாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என கேட்டுக் கொண்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in