

குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்துவதன் மூலம் பாதிக்கப்படும் மக்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய குடியிருப்புகள் அமைத்து தரப்படும் என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் உறுதியளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் பகுதியில் இஸ்ரோ சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படவுள்ளது. இதன் பொருட்டு உடன்குடி அருகேயுள்ள கூடல்நகர், அமராபுரம் பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பாதிக்கப்படும் 2 கிராம மக்களுக்கும் மாற்று நிலம், வீடு வழங்குவதற்கு இடம் தேர்வு செய்வதற்காக உடன்குடி அருகே செட்டியாபத்து ஊராட்சி தாங்கையூர் பகுதியில் உள்ள நிலத்தை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குலசேகரன்பட்டினம் பகுதியில் இஸ்ரோராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக நிலம் எடுப்பு பணி நடைபெற்று வருகிறது. கூடல்நகர் பகுதியில் 33 குடியிருப்புகள் நில எடுப்பு பகுதிக்குள் வருகின்றன.
இக்குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு சாலை வசதி, குடிநீர் வசதி,சமுதாயக் கூடம் மற்றும் பல்வேறு வசதிகளுடன் கூடிய குடியிருப்புகள் அமைக்க தாங்கையூர் பகுதியில் இடம் பார்க்கப்பட்டது. மேலும் பல்வேறு பகுதியில் உள்ள அரசுபுறம்போக்கு நிலங்கள் பார்வையிடப்பட்டு, கூடல்நகர் மக்களின் விருப்பத்துக்கு ஏற்ற இடம் தேர்வுசெய்யப்பட்டு, அனைத்து வசதிகளுடன் குடியிருப்புகள் அமைத்து தரப்படும். இஸ்ரோ நில எடுப்பு பணிகள் தற்போது விரைவாக நடைபெற்று வருகிறது. விரைவில் நிலம் ஒப்படைப்பு செய்தவுடன் இஸ்ரோ மூலம் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் தொடங்கும் என்றார்.
இஸ்ரோ நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனப்ரியா, திருச்செந்தூர் வட்டாட்சியர் முருகவேல், இஸ்ரோ நில எடுப்புவட்டாட்சியர்கள் ராஜு, ரவிகலா,அற்புதமணி, செல்வி, நாகசுப்பிரமணியன், சிவகாமசுந்தரி, செட்டியாபத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.