

கரோனா தொற்று முதல் அலையில் பெரியவர்களை அதிகம் பாதித்தது. இரண்டாவது அலையில் இளம் வயதினரை அதிகம் பாதித்துக் கொண்டிருக்கிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வரை ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக இரண்டாவது அலையில் ஏராளமானோர் இறந்தனர். அதனால் பொதுமக்கள் இந்த தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஆர்வமாகத் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மூன்றாவது அலை முன்னெச்சரிக்கையாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சைக்காக பிரத்யேக கரோனா வார்டு விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த வார்டில் 50 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளதாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.