

முழு ஊரடங்கு நேரத்தில் திருநெல்வேலி மாநகரில் தேவையின்றி வாகனங்களில் சுற்றித்திரிவோரை கட்டுப்படுத்த வும், கண்காணிப்பை தீவிரப்படுத்த வும் வண்ணார்பேட்டை செல்ல பாண்டியன் ரவுண்டானா, தச்சநல்லூர், திருநெல்வேலி சந்திப்பு அண்ணாசிலை பகுதி, பாளையங்கோட்டை பேருந்து நிலைய பகுதிகளில் போலீஸார் தற்காலிக சோதனை சாவடிகளை ஏற்படுத்தியிருந்தனர். போலீஸாரின் எச்சரிக்கையையும் மீறி ஏராளமானோர் வாகனங்களில் சுற்றித்திரிந்ததை அடுத்து முதற்கட்டமாக அவர்களை எச்சரித்து அனுப்பினர். ஆனாலும், சாலைகளில் வாகனங்கள் கட்டுக்கடங்காமல் சென்றதை அடுத்து, இருசக்கர வாகனங்களில் சென்ற பலரை பிடித்து, அவர்கள் ஒவ்வொருவரையும் 5 திருக்குறளை எழுதுமாறு போலீஸார் நூதன தண்டனை வழங்கினர். அதில் பலரும் திருக்குறள் தெரியாமல் திணறி யதை அடுத்து, செல்போனில் திருக்குறளை படித்து எழுதுமாறு போலீஸார் பணித்தனர்.
ஆனாலும் இருசக்கர வாகனங்களில் பலர் தேவை யின்றி சுற்றித்திரிவது கட்டுக் குள் வரவில்லை. இதனால், அவர்களுக்கு கட்டாய கரோனா பரிசோதனை மேற்கொள்ள போலீ ஸார் முடிவு செய்து, மாநகராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை ஒத்துழைப்புடன் அந்தந்த சோதனைச் சாவடிகளில் கட்டாய கரோனா பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
அவ்வாறு 5 நாட்கள் 438 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் 48 பேருக்கு தொற்று உறுதியானது போலீஸாருக்கும், சுகாதாரத்துறையினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 10 சதவீதத்துக்கும் மேற்பட்டவர் களுக்கு கரோனா உறுதியானது. இவர்கள் மூலம் எத்தனை பேருக்கு கரோனா பரவியிருக்கும் என்பது இனிவரும் நாட்களில் தெரியவரும்.
தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் திருநெல்வேலி மாநகர சாலைகளில் வாகன போக்குவரத்து வழக்கம்போல் இருக்கிறது. அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் ஏராளமானோர் வாகனங்களில் வலம் வருகிறார்கள். இதனால் கட்டுக்குள் வந்த தொற்று மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.