நோய் தொற்றால் அடுத்தடுத்து இறக்கும் ஆடுகள் : நாங்குநேரி பகுதி விவசாயிகள் கவலை
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகாவுக்கு உட்பட்ட மருதகுளம், மூலைக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி, பருத்திப்பாடு, ரெங்கசமுத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. இப்பகுதிகளில் ஆடுகளை தோட்டங்களில் கிடை அமைத்தும், மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றும் விவசாயிகள் வளர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 25 நாட்களுக்கு முன் இப்பகுதியில் ஆடுகள் மத்தியில் ஒருவித நோய் பரவத் தொடங்கியதால், ஆடு வளர்ப்போர் அதிர்ச்சி அடைந்தனர். ஆடுகளின் கண்களில் வீக்கம் ஏற்பட்டு, வாயில் நுரை தள்ளி இறந்ததால் கால்நடை மருத்துவர்களை அணுகினர்.
இதையடுத்து ஆடுகளுக்கு அம்மை நோய் தாக்குதல் இருப்பதாக தெரிவித்து, தடுப்பூசிகள் போடப்பட்டன. ஆனாலும், கடந்த சில நாட்களாக ஆடுகள் கொத்து கொத்தாக இறப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
நோய் அறிகுறி உள்ள ஆடுகளை தனி கூண்டுகளில் அடைத்து பராமரிப்பு செய்தும் பலனில்லை. தற்போது தினமும் ஒவ்வொரு கிடையிலும் 10 முதல் 15 சதவீதம் ஆடுகள் கண்களில் வீக்கம் ஏற்பட்டு, வாயில் நுரைதள்ளி இறப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ரெங்கசமுத்திர த்தை சேர்ந்த விவசாயிகள் கணேசமூர்த்தி, திருமலைநம்பி ஆகியோர் கூறும்போது, “இதற்கு முன் இதுபோல நோய் தொற்று செம்மறி ஆடுகளுக்கு ஏற்பட்டதில்லை. அம்மை நோய் என்றால் உயிரிழப்பு ஏற்படாது. ஆனால், இப்போதுள்ள நோய் தொற்று அதிகளவில் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. நோய் தொற்று மேலும் பரவாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
200-க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துவிட்டன. பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
இதனிடையே ஆடுகளுக்கு ரத்த பரிசோதனை மேற் கொள்ள அதிகாரிகள் உறுதி அளித்திருப்பதாக பருத்திப் பாட்டை சேர்ந்த விவசாயி கந்தன் தெரிவித்தார்.
