பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் - 2 ரயில்கள் மோதிய விபத்தில் 36 பேர் மரணம் :

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில்  -  2 ரயில்கள் மோதிய விபத்தில் 36 பேர் மரணம் :
Updated on
1 min read

பாகிஸ்தானில் 2 ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் 36 பேர் இறந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

பாகிஸ்தானில் சிந்து மகாணம் கோத்கி மாவட்டம் தர்கி நகர் அருகே நேற்று அதிகாலை2 ரயில்கள் மோதிக் கொண்டன. கராச்சியில்இருந்து சர்கோதாவுக்குச் சென்று கொண்டிருந்த மில்லட் எக்ஸ்பிரஸ், அதிகாலையில் தடம் புரண்டது. அந்த ரயில் அருகிலிருந்த மற்றொரு ரயில் பாதையில் குறுக்கே சென்றுவிட்டது. அப்போது மில்லட் எக்ஸ்பிரஸ் ரயில் மீது ராவல்பிண்டியில் இருந்து எதிர்த்திசையில் வந்து கொண்டிருந்த சர் சையத் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது.

இந்த விபத்தில் 14 ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. இவற்றில் 6 முதல் 8 பெட்டிகள் முற்றிலும் சேதமடைந்தன. இந்த பயங்கர விபத்தில் 36 பேர் இறந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தகவல் அறிந்து உடனடியாக அந்தப் பகுதிக்குச் சென்ற அதிகாரிகளும் மீட்பு படையினரும் ரயில் பெட்டிகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அந்தப் பகுதியில் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் விபத்து அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், விபத்து குறித்தும் ரயில்கள் பாதுகாப்பு குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in