

தமிழக அரசுத் துறைகளின் பெயர்மாற்றம் தொடர்பாக அலுவல் விதிகளில் திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, பணியாளர் நிர்வாகசீர்திருத்தத் துறை என்பது மனிதவள மேலாண்மைத் துறையாகவும், வேளாண் துறையானது வேளாண்மை மற்றும் விவசாயிகள்நல்வாழ்வுத் துறையாகவும் மாற்றப்பட்டு இதன்கீழ், மாநில அளவில்உழவர்கள் பயிற்சி மையம், உழவர் நலன் சேர்க்கப்பட்டுள்ளது.
கால்நடை பராமரிப்பு, பால்வளம், மற்றும் மீன்வளத் துறையில் மீன்வளத் துறைக்குப் பதில் மீனவர்நலத் துறையாக மாற்றப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை என்பது சுற்றுச்சூழல், பருவகால மாறுபாடு மற்றும் வனத்துறை என மாற்றப்பட்டுள்ளது. மக்கள்நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையில் மக்கள் நல்வாழ்வு என்பது மருத்துவம் எனவும், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை என்பது தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையாகவும், சமூக நலன், சத்துணவு திட்டத்துறையானது சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறையாகவும் மாற்றப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறையின் கீழ் இருந்த பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட கால்வாய்கள் பராமரிப்பு, நிலத்தடி நீர் திட்டங்கள், பாசனம்மற்றும் சிறு பாசனம், சிறப்பு சிறுபாசனம் மற்றும் தூர்வாரும் திட்டங்கள், மேட்டூர் டவுன்ஷிப் கமிட்டி உள்ளிட்டவை புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நீர்வளத்துறையின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன.