 அபிநவ்.
 அபிநவ்.

சேலம் சரக டிஐஜி பொறுப்பேற்பு - குற்றங்களை கண்காணித்து தடுக்க நடவடிக்கை: சேலம் புதிய எஸ்பி தகவல் :

Published on

சேலம் சரக டிஐஜி-யாக இருந்த பிரதீப் குமார், ஐஜி-யாக பதவி உயர்வு பெற்று சென்னை மாநகர போக்குவரத்து இணை ஆணையராக நியமிக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக சென்னை தலைமை அலுவலக டிஐஜி-யாக இருந்த மகேஸ்வரி, சேலம் சரக டிஐஜி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

சேலம் மாவட்ட எஸ்பி-யாக இருந்த தீபா காணிகர், சென்னை அண்ணாநகர் துணை ஆணையராக பணியிட மாறுதல் செய்யப்பட்டார். இதையடுத்து, கடலூர் மாவட்ட எஸ்பி அபிநவ் , சேலம் எஸ்பி-யாக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் கண்காணிக்கப்பட்டு, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

சாலை பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, விபத்து இல்லா மாவட்டம் என பெயரெடுக்கும் வகையில் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க உரிய கவனம் செலுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in