

தூத்துக்குடி அருகே மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் சுமார் 120 தூய்மைப்பணியாளர்களுக்கு அரிசி, மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை கனிமொழி எம்.பி. வழங்கினார். தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும்கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்டஆட்சியர் கி.செந்தில் ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். 45 வயதுக்குமேற்பட்டோருக்கு 13 சதவீதத்துக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு 80 சதவீதத்துக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தற்போது அதிகமான மக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். ஆனால், மத்திய அரசிடம்இருந்து வரவேண்டிய தடுப்பூசிகள்இன்னும்வந்து சேராததால் பலமாவட்டங்களில் தடுப்பூசி போதிய அளவுக்கு போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 18 பேர் கரும் பூஞ்சை பாதிப்பு அறிகுறிகளுடன் சிகிச்சை பெறுகின்றனர். இதில் 6 பேருக்கு தொற்று இருக்கும் என சந்தேகம் உள்ளது. அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது கரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் கரோனா பாதுகாப்பு திட்டங்களை முறையாக செயல்படுத்தவில்லை. நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக ஒரு குழுவை முதல்வர் அமைத்துள்ளார். பிரதமருக்கும் கடிதம் எழுதியுள்ளார். எம்.பி.க்கள் அனைவரும் நேரில் சென்று வலியுறுத்த வேண்டும் என முதல்வர் கேட்டுக்கொண்டால், நிச்சயம் செல்வோம் என்றார்.