

முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வலியுறுத்தி சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும் தொழிலாளர்கள் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டர் டெலிவரிமேன்ஸ் எம்ப்ளாயிஸ் யூனியன் திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் ராஜகோபால், தலைவர் பாலு, பொருளாளர் சக்திவேல் தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது.
பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் அவர்கள் அளித்த மனு விவரம்: திருநெல்வேலி மாவட்டத்தில் 3 எண்ணெய் நிறுவனங்களைச் சேர்ந்த சமையல்எரிவாயு சிலிண்டர் பெறும் வாடிக்கையாளர்கள் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். சிலிண்டர்விநியோகம் செய்யும் தொழிலாளர்கள் 2,500-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். கடந்த ஆண்டு கரோனா காலத்தில் சிலிண்டர் விநியோகம் செய்யும் பணியாளர்கள் பெருமளவுக்கு பாதிக்கப்பட்டனர். தற்போதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும் பணியாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். எனவே மத்திய, மாநில அரசுகள் சிலிண்டர் விநியோகம் செய்யும் பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்.
மாத ஊதியம், இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்ட வசதிகளை செய்துதர வேண்டும். தொழிலாளர்கள் இறக்கும்பட்சத்தில் பணியாளர்கள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும். சிலிண்டர் விநியோகம் செய்வோருக்கு வார விடுமுறை வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.